Tuesday, 7 August 2012

பொய்கைக்கரைப்பட்டி


சந்திர காந்தன்

வெளியே வீடாக வாழ்ந்த மனிதர்கள் சுவர்களைக் கொண்டு தடுத்த வீடுகளுக்குள் இருந்த 'வெளி'யில் வாழ்ந்து, வாழ்வது ஒரு முன்னேற்ற நிலை. வீடு என்பதே வெளிதானே என வினவினார், தாவோ.

காணிநிலமும் அந்தக்காணி நிலத்திடையே ஓர் மாளிகையும் வேண்டும் எனக் கோரிக்கை மனு சமர்ப்பித்தார் பாரதியார், பராசக்தியிடம். அவரே, "வீடு என்ற சொல்லுக்கு விடுதலை என்பது பொருள். வெளியில் எத்தனையோ அச்சங்களுக்கு ஹேதுக்கள் உள. அவ்விதமான அச்சங்கள் இல்லாமல் விடு தலைப்பட்டு வாழத்தகுந்த இடத்துக்கு வீடு என்ற பெயர் கொடுத்தனர் போலும். விடத்தக்கது வீடு என்ற பிற்கால உரை ஒப்பத்தக்கதன்று. 'விடத்தக்கது வீடு' என்பது கற்றோர் துணிபாயின், அக்கற்றோர் வீட்டில் குடியிருப்பது யோக்யதையன்று; அவர்கள் காட்டில் சென்று வாழ்வது தகும்" என்றும் எழுதினார்.

அடிப்படைத் தேவை எனக்கூறப்படும் மூன்றனுள், வீடு தமது அழகுணர்ச்சியின் வெளிப்பாடாகவும் அந்தஸ்தின் அடையாளமாகவும் திகழவேண்டும் என்று எண்ணுவோரின் எண்ணிக்கை சமூகப்பொருளாதார மாற்றங்களின் காரணமாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இவ்வாறாக வீட என்னும் தேவை அளவு ரீதியாகவும் பண்பு ரீதியாகவும் பரவிக்கொண்டே போய் நகரமயமாக்கல் என்ற விசுவரூபம் எடுத்து, மனிதர்களைப் பேய் போல கவ்விப்பிடித்து, அவர்கள் புறவாழ்விலும் எத்தனை எத்தனை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை அழகாக நாவலாக்கி உள்ளார், எஸ்.அர்ஷியா.

அந்நாவலுக்கு ஓர் அழகானத் தலைப்பும் வைத்துள்ளார், அவர். பொய்கைக்கரைப்பட்டி. பட்டிகள் எல்லாம் தங்கள் தனளித்துவத்தை இழந்து பெருநகரங் களின் அங்கங்களாகிப் போயக் கொண்டிருக்கிற மாற்றத்தைப் பற்றி அத்தலைப்பே சிந்திக்க வைக்கிறது.

பொய்கைக்கரைப்பட்டி, எத்தகைய ஊர்?

"பதினேழு கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் மதுரை நகரில் வெயில் வாட்டியெடுக்கும். ஆனால் மலையைச்சுற்றியிருக்கும் இடங்களில், லேசாகவும் கனமாகவும் மழை பொழிந்திருக்கும். தொடர்ச்சியாகப் பொழியும் லேசான மழையில், மண் குளிர்ந்து பயிர்கள் கம்பீரமாக நிற்கும். கனமழையின் போது, சுற்றியுள்ள மலைகளின் மீதிருந்து அடித்து வரப்படும் மணலும் மூலிகையும் அந்தப்பகுதிக்கு உரமாகி வளம் கூடிவிடும். செம்மண்ணும் மணலும் கலந்த செவல் பூமியது. வேறெங்கும் இதுபோன்ற அமைப்பு இல்லை. எதை நட்டாலும் நாலு நாளில் முளைவிடும். வேர்பிடித்துத் தலை தூக்கும். குச்சியால் ஆழக் குத்தினாலே போதும். பூமியில் ஈரம் கசியும். நாலடி தோண்டினால், வாளியில் தண்ணீர் மொள்ளலாம்".

இந்த நிலமும் இந்த நிலத்தின் மைந்தர்களும் எப்படியெல்லாம் சிதைந்து போகிறார்கள் என்பதே நாவலின் மைய இழை!

'மரத்தை வெட்டியதும், இந்த பறவைகளெல்லாம் எங்கே போகும்?' என்று கேட்டுக்கொள்ளும் சமுத்திரக்கனியின் தொழிலே வீட்டுமனைகளாக விவசாய நிலங்களை மாற்றித்தரும் புரோக்கர் என்பதுதான், வாழ்வின் கோரம். புரோக்கர் என்று சொன்னால் சமுத்திரக்கனி பதறிப் போவார். அவர் அழகர் மலையானுக்கே அவித்துக் கொட்டும் பரம்பரையில் உதித்தவராயிற்றே, பதற மாட்டாரா? உழவுத் தொழில் செய்து அப்பன் சேர்தது வைத்ததிலட வாழக் கொடுத்து வைத்து அவர் கஜேந்திரக்குமாரின் 'ஞான ஸ்தானத்தில்' மீடியேட்டர் ஆகிறார். 'மரத்தை வெட்டியதும் பறவைகள் எங்கே போகும்?' என்று தன்னையே கேட்டவர், போட்டி மீடியேட்டர்களால் தலை வேறு முண்டம் வேறாக வெட்டிப் போடப் படுகிறார். இந் முதல் அத்தியாயமே நாவலுக்கு அற்புதமான தொடக்கமாகக் கச்சிதமாகப் பொருந்திப் போகிறது.

இந்நாவலில் பல காட்சிகளில் நாம் சந்திக்கும் பாத்திரம், கஜேந்திரக்குமார். சம்பள உயர்விற்காகத்தங்களை தொழிலாளர்களோடும், வாழும் முறையில்(Style of living) தங்களைப் பெரு பணக்காரர்களோடும் அடையாளப்படுத்திக் கொள்ளும் மத்தியத் தர வர்க்கத்தினரின் 'கனவு இல்லம்' என்ற வேட்கையைப் பூர்த்தி செய்வதையே தனது தொழிலாகக் கொண்டவர், இவர். அதற்காக இவர், விதை விைத்துப் பயிர் செய்த நிலங்கிளன் மீது பணத்தை விதைக்கிறார். அவரது வேலையாட்களில் ஒருவன் ஜேசிபி ஓட்டுனன் என்கிற பதுரக வேலையாள். அவனை அர்ஷியா அமர்க்களமாக அறிமுகப்படுத்துகிறார். ஒரு தோட்டத்தைச் 'சுத்தம்' செய்யும்போது தென்பட்ட ஏழு அடி நீளமுள்ள நாகத்தை அடித்துக் கொன்றபோது, கஜேந்திரக்குமார் சொல்கிறார் : 'அதுகளோட இடம் இது. நாம் வந்து ஆக்கிரமிக்கிறப்போ இப்டித்தான் தட்டுப்படும்'.

கனவு இல்ல வேட்கை பாம்புகளின் இருப்பிடத்தை மட்டுமா காவு கொள்கிறது? எலிகள் தரைக்குள் அழகாக வீடு கட்டிய வயல் வரப்புகளின் மீதல்லவா புதிய நகரங்களின் வீடுகள் எழுகின்றன. அந்த எலிகள் கட்டிய வீடுகளைப்பற்றியும் அவற்றின் நுணுக்கம், வீர சாகசப் போர்கள் பற்றியும் அர்ஷியா எழுதியிருப்பது - வெறும் விபரமாக மட்டுமல்லாமல், இந்நாவலுக்கு ஒரு புதிய அர்த்தத்தையும் கொடுக்கிறது.

இப்படியாக சமுத்திரக்கனி என்கிற மனிதன், ஏழடி நாகம், எலிகளின் வலைகள் எனப் பலவகைக் களப்பலிகள் கொண்டு விரிகிறது, கஜேந்திரக்குமாரின் சாம்ராஜ்ஜியம். 'எதனை எதனால் முடிக்கும் என ஆய்ந்து அதனை அவனிடம் கொடல்' என்ற புதுயுக நெறியில் கில்லாடியான அவர் நட்பு, ஊடகத் தொடர்பு, பணம், வங்கி, அதிகார வட்டரா உறவு என அனைத்தையும் தனக்குச் சேவை செய்யப் பயன்படுத்திக் கொள்கிறார். சமுத்திரக்கனியை பறிகொடுத்த அவருக்கு - ஸ்கூட்டரில் வந்து சமுத்திரக் கனியைப் 'பணிக் கொண்ட' அவருக்கு - இப்போது காரில் ஏறி இடையாள் பிடிவலை வீசிசருகிற அவருக்கு மலைக்கள்ளன் கிட்டுகிறான். ஆரல்வாயமுதன் என்கிற மலைக்கள்ளன். இவன் சமுத்திரக் கனியினும் சாகஸக்காரன்.

மலைக்கள்ளன் கண்ணியில் உழவர்கள் சிக்குகின்றனர். அழகர்மலைத் தண்ணீர் ஆங்காங்கே 'பிளாட்டுகளாலும் தடுப்புச் சவர்களாலும்' திசைதிரும்பத் தங்கள் வாழ்க்கைக்காக வேறு திசைகளைத் தேடும் உழவர்கள், ஊர்க்காரர்கள், உறவுக்காரன் என அவனை நம்பி, பத்திர ஆபிசுக்குப் போய் கையெழுத்துப் போட்டுவிட்டு, டெம்பிள் சிட்டி ஓட்டலில் டிபன் சாப்பிட்டப் பின், 'அட்வான்ஸ் பணத்துடன்' திரும்பினார்கள். 'உழவே தலை' என்று உரக்க மேடையில் 'பொம்மையன் காட்டு ஒத்தைப்பனையில் தொங்கிய ஓலை' (அர்ஷியாவின் உவமை இது. மாற்றிப் பயன்படுத்தப் படுகிறது)போல பேசிய அரசு எந்திரத்தின் இயக்குநர்களும், அணி, நட்டு இத்யாதி வகையறாக்களும் வேளாண் தொழிலை வேண்டாதத் தொழிலாக்கும் நடைமுறையில் ஈடுபட்டதன் காரணமாக நஷ்டக் கணக்கையே எட்டிஎட்டிப் பார்த்தவர்கள் அவன் இலக்காயினர். உழவுப் பண்பாட்டின் வேர்களையே உலுக்கும் ஊடக நாகரீகங்கள் ஏற்படுத்தியத் தாக்கங்களால் உருவாக்கப்பட்ட புதிய தலைமுறைகள் அவன் வயப்பட்டனர். பெற்ற அப்பனையும் எவளோ தன் புருஷனுக்குப் பெற்றவனைத் தன் மகனாய் வளர்த்த ஆத்தாளையும் 'ஒரு கடையைப் போட்டு மொதலாளியா' ஆவதற்காகக் கடம்பவனன் ஏமாற்றிப் பத்திரப்பதிவுக்குக் கூட்டிவரக் காரணமாகிறான், மலைக்கள்ளன்.

அந்தக் காட்சியை அர்ஷியா எழுதியிருக்கிற விதம் அலாதியானது. தங்களை ஏமாற்றி, நிலத்தை விற்றுவிட்டு அந்தப் பணத்தைச் சுருட்டிக் கொண்டு மகன் போய்விட்டதை அறியாமல் அவன் வருவான் என்று காத்திருக்கிற அவர்களின் சித்திரம் நெஞ்சை அறுக்கிறது. அவர்களுக்குக் கஜேந்திரக்குமார் வந்து சொன்ன பிறகு தான் உண்மை தெரிய வருகிறது. 'முட்டை போண்டாவின் (முட்டை போண்டாக்களும் குவார்டர்களும் வெற்றிலைப் பாக்கு மரியாதைகளும் எத்தனைப் புரட்டல்களுக்கு கருவிகளாகியிருக்கின்றன) மெதக்கத்தில் இருந்த செவலையம்மா உணர்வு பெற்றவளாகிப் பதறிப்போய்க் கேட்டாள். "அய்யா, என்ன சொல்றீங்க? நிலம் வித்தப் பணமா?" கஜேந்திரக்குமார் அதிர்ச்சியடைகிறார். ரேஷன் கார்டு வாங்கித் தருவதாகக் கூட்டி வந்து, பத்திர ஆபிசில் கையெழுத்துப் போட வைத்துப் பணத்தோடு ஜூட்டாகிவிட்ட மகனுக்காகக் காத்திருக்கிறார்கள் என்று அறிகிறார். அவருக்கே பாவமாகத்தான் தெரிந்தது. ஒரு மகன் செய்யும் காரியமா இது? தன்னிலைக்கு வந்தவர், தன்னைத் தேத்திக் கொண்டு நூறு ரூபாய்த்தானை எடுத்து செவலையம்மா கையில் கொடுத்தார். கஜேந்திரக்குமார் அங்கிருந்து கிளம்புகிற போது செவலையம்மா, ''என்னமோ நிலம் வித்தப் பணம்ன்னு சொன்னீ ங்களே" என்று புலம்பியது அவர் காதில் விழுந்தது. அர்ஷியா இந்த இடத்தை இப்படி முடிக்கிறார் : 'மனசுக்குள் மெதுமெதுவாய் பாரம் ஏறுவதை அவரால் உணர முடிகிறது. அப்போது உள்மனசு சொல்கிறது, ஆடு அலறுதேன்னு கறி திங்காம இருக்கோமா?'

இப்படியாக ஆன்மீகத்துக்கும் லெளகீகத்துக்கும் இடையே ஊடாடி, இறுதியில் லெளகீகத்தின் பக்கம் சாய்கிற கஜேந்திரக்குமார் ஆட்டைப்போல அலறவேண்டிய சந்தர்ப்பங்கள் அவர் வாழ்விலும் நேர்கின்றன.

இராமநாதபுரத்திலிருந்து கிளம்பிவந்து ஒண்டக்கூட இடமில்லாமல் இரண்டு இரவுகளைக் கீழ் மதுரை ரயில் நிலைய சிமெண்ட் பெஞ்சில் கழித்த, சாப்பிடக்கூட காசில்லாமல் பசியோடு மதுரைத் தெருக்களில் அலைந்து திரிந்த கடந்தக் காலத்தை நினைத்துப் பார்த்து தூக்கம் வராமல் எழுந்து தனது கனவுத் திட்டமான லெவின்ஸ்கி கார்டனுக்கு வந்து, அங்கு காலாற நடந்து சுகம் கண்டு, தனது கண்ணுக்கு எட்டாத தூரம்வரை அவரது எல்லை நீண் டிருப்பதாகப் பட்டு, 'மனசுக்குள் சந்தோஷமாக இருந்தாலும் அது நிறைவு தராமல் இன்னும் இன்னும்' என்று தாகம் கொள்கின்ற கஜேந்திரக்குமார் ஆட்டைப்போல அஞ்சி நடுங்கி அலற நேர்கிறபோது, அந்தச் செவலையம்மாளை நினைத்தாரோ என்னவோ, அர்ஷியா எதுவும் சொல்வதில்லை. கமுக்கமாய்க் கண் சிமிட்டுகிறார்.

யாரோ ஒரு முகம் தெரியாத அண்ணனின் அதிகாரக் கரங்கள், கஜேந்திரக்குமாரின் மெள அழுகையைப் பொருட்படுத்தாமல் அவரது உடம்பிலிருந்து எவ்வளவு இயலுமோ அவ்வளவு மாமிசங்களைக் கொத்துக் கொத்தாக அள்ளிக் கொள்கின்றன.

தனிமையாய் இருந்து அந்த மெளன சோகத்தைத் தீர்த்துக் கொள்ளச் சென்ற இடத்தில் மும்பையைச்சேர்ந்த தாதா கும்பலின் உள்ளூர் அடியாட்கள் துப்பாக்கி முனையில் குத்திக் குடைந்து கஜேந்திரக் குமார் என்கிற ஆட்டிடமிருந்து மாமிசங்களை அறுத்துக் கொண்டு போகின்றனர்.

'ஆடு அலறுதேன்னு கறி திங்காம இருக்கோமா?' என்ற நியாயம் கஜேந்திரக் குமாருக்கு மட்டும்தானா? ஆட்சி பீட அண்ணனுக்கும் உண்டல்லவா? திரைப்படங்களில் மட்டுமே பார்த்துவந்த துப்பாக்கி முனைக் கொள்ளையர்களுக்கும் உண்டல்லவா?

இந்த நான்குக் காட்சிகளையும் இணைத்துப் பார்க்கின்றபோது, மானுட இயல்பு, மானுட வாழ்வின் பொருள் குறித்தெல்லாம், நாவலின் தளத்தில் நின்று பல விசாரணைகள் கிளை வெடிக்கின்றன. அவற்றுள் ஒரு கிளை விசாரணை மட்டும் கஜேந்திரக் குமாரின் நினைவாக, ஒரு சுடுகாட்டில் சிலரிடையே நிகழும் வாதமாக அர்ஷியா படைத்துக் காட்டி உள்ளார். நாவலின் கதைப்போக்குக்கு அது அவசியமற்றதுபோல புறத் தோற்றத்தில் தோன்றினாலும் ஆழ அந்தரத்தில் ஓர் இணைப்பு அல்லது ஓர் அவசியம் இருக்கவே செய்கிறது. இந்நாவலில் பல இடங்களில் இந்தப்போக்கு காணப்படவே செய்கிறது. படிக்கிறபோது ஒரு வேண்டாத துறுத்தலாக இடைஞ்சல் செய்வன எல்லாமே புத்தகத்த மூடிவைத்துவிட்டுச் சிந்நதக்கின்றபோது, அவசியமான ஒன்றாகவே தோன்றும்படி செய்யும் ரசவாதம் அர்ஷியாவின் கைவண்ணம். அர்ஷியா வெறும் கதை சொல்லி மட்டும்தானா என்ன?

எல்லோரையும் பலி கொண்டு விடுகிற கஜேந்திரக் குமாருக்கும் அவரது மீடியேட்டர்கள் சமுத்திரக் கனி, மலைக்கள்ளன், ஆகியோருக்கும் சவால்விட்டு நிற்பவர் மலைநாட்டான். "மோசம் செய்துவரும் மழை, வாட்டியெடுக்கும் வெயில், ஏமாற்றிவிடும விதைகள், விலையேறிப்போன உரம்,இடையில் விலை வைக்கும் தரகர்கள் எல்லாமாகச் சேர்ந்தும்" கலகலக்க வைக்க முடியாதவிவசாயி மலைநாட்டான். 'சம்சாரின்னா அவர மாதிரி இருக்கணும்' என்று பாராட்டுப் பெற்றவர், அவர். அவர் விவசாயம் பார்க்கும் ஏழு ஏக்கர் மண்ணைச் சேர்த்துவிட்டால், கஜேந்திரக் குமாரின் திட்டம் பூர்த்தியாகிவிடும். அதற்காக அவரை அணுகியவர்களிடம் மலைநாட்டான் சொல்கிற பதிலிலிருந்து தெரிகிறது: நிலம் அவருக்கு வெறும் மண் மட்டுமல்ல; அதற்கும் மேல். அங்கிருப் பவை வெறும் தாவர உயரிகளல்ல; அவற்றிற்கும் மேல். அது அவர் வாழ்வின் அர்த்தம். அவர் ஏதோ பயிர்களை உண்டாக்கிப் பாதுகாத்து அறுத்து விற் கும் மனிதனில்லை. அதற்கும் மேல்; ஒரு படைப்பாளி.

அவர் சொல்கிறார் : 'இது எங்க தாத்தா விட்டதை, எங்கப்பாரு மீட்டு எங்கைல குடுத்துட்டுப் போயிருக்காரு. எங்கப்பாட்டி அங்கம்மாவோட ஆவி இங்க தான் இருக்குது. எங்கம்மாவையும் இங்கதான் பொதைச்சுருக்கோம். இதோ இது, எம்பொண்டாட்டியோட சமாதி. சொல்லப்போனா இது எங்கக் குடும்பக் கோவில். யாராச்சுமு கோவிலை விப்பாங்களா? அப்படியேன்னாலும் இப்ப இதை விக்கணுங்குற அவசியமில்லையே!'

அப்படியொரு அவசியத்தை உண்டாக்க வல்வராயிற்றே கஜேந்திரக் குமார். பாதாளம் மட்டும் பாயவல்ல பணம் எதிர்த் திசையில் இமய உச்சிவரைப் பாயாதா, என்ன? சாட்சாத் ஸ்ரீதேவியின் அருட் கடாட்சத்திற்காக அரசு அலுவலகங்களில், ஆட்சிக் கட்டில்களில் கோப்புகள் மீதேறி தவமியற்றுபவர்கள் கஜேந்திரக்குமாரின் கவலையைத் தங்கள் கவைலையாகக் கொள்ள மாட்டார்களா? அவர் கவலையை மாற்றுவதே தங்கள் காரியம் என்று கருதிக் களத் தில் இறங்க மாட்டார்களா?

தண்ணீர் வரும் வழி அடைக்கப்படுகிறது. மலைநாட்டான் தோட்டத்துக்கு வரும்வழி மட்டுமா? 'அழகர் மலையின் சுந்தர்ராஜப் பெருமாள், ஆண்டுக்கு இைண்டு முறைபக்தர்களுக்கு அருள்பாலித்து உலாப் போகும் தெப்பக்குளத்திற்குத தண்ணீர்வரும் வழியும் அடைபட்டுவிட்டது. "தண்ணீரில்லாத தெப்பக்குளத்தின் கரைகளில், பிறர் சுமக்க, தோள்களில் உலா போவதற்கு அவர் வெட்கப்பட்டுக் கொண்ட மாதிரியும் தெரியவில்லை. ஓடையை அடைத்து இடத்தை அபகரித்துக் கொண்டவர்களுடன் அவரும் கூட்டணி வைத்துவிட்டார்போல. அமைதியாக மலையில் உறங்குகிறார்". கடவுளின்கதியே இதுவென்றால்...? மலைநாட்டான் மனிதன்.

நாவல் இப்படி முடிகிறது : "தண்ணீர் வரும் வழி அடைக்கப்பட்ட பின், மழையிம் விழாமல், போரில் தண்ணீரும் வராமல், உயர்ந்துவரும் கட்டிடத் துக்குப் பக்கத்திலிருந்த வாழைத் தோட்டம் கருகிப் போயிருந்தது. அதைப் பார்ததுக்கொண்டே வந்த மலைநாட்டானிடம் செண்பகம் சொன்னாள்: 'பேசாம நாமளும் இதை வித்துட்டுப் போயிறலாம்ப்பா. தண்ணீயுமில்லாம, மழையுமில்லாம எத்தனை நாளைக்குத்தான் இப்டியே பாத்துக்கிட்டுருக்க முடியும்? கடவுளும் நம்மளக் கை விட்டுட்டாரு. வேற வழியில்லப்பா!"

காதில் விழுந்ததை அமைதியாகக் கேட்டுக் கொண்ட மலைநாட்டான், மகள் முகத்தை நிதானமாக ஏறிட்டார்.

புத்தகத்தை மூடிவிடுகிறோம். பல கேள்விகளின் கதவுகள் திறக்கின்றன.மலைநாட்டானின் நிதானமான ஏறிடலுக்கு என்ன பொருள்? கட்டிடங்கள் உயர்ந்துநின்று வாரழத் தோட்டம் கருகினால், மானுட வாழ்வு என்னாவது? உயர்ந்த கட்டிடங்களில் இருப்பீரே, இனி உணவுக்கு என் செய்வீரே? இப்படிப் புகை வளையங்களாகக் கேள்விகள் சுழன்றுகொண்டே இருந்தாலும் ஒன்று மட்டும் உறுதியாய்ப் புலப்படுகிறது. ஆம், ஒன்று மட்டும். அது, அர்ஷியா என்னும் கலைஞனின் எழுத்தாளனின் வெற்றிப் புன்னகை.

நன்றி : புத்தகம் பேசுது நவம்பர் 2011

1 comment:

  1. பொய்கைகரைப்பட்டி நாவல் குறித்த நல்ல பதிவு. ஒருபுறம் வாசிக்கணும் என்ற ஆவல் மிகுந்தாலும் விளைநிலம் விலைநிலமானதை அறிந்து வருந்துவோமே என்ற எண்ணமும் வருகிறது. பொய்கைகரைப்பட்டி தெப்பத்திருவிழாக்கு சென்ற ஆண்டு சென்றிருந்தேன். அழகர்அன்னவாகனத்தில் தெப்பத்தில் வந்தார். இம்முறை மழையில்லாததால் கரை சுற்றினார். என்ன செய்வது?

    ReplyDelete